×

கர்மவீரர் காமராஜருக்கு இன்று 120வது பிறந்தநாள் ; இது வரலாற்றில் பொன்னாள் : முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ், ஓபிஎஸ், கமல் உள்ளிட்டோர் வாழ்த்து!!

சென்னை : தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 120வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை #கல்விவளர்ச்சிநாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்!  போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்!  கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்! தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திடப் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதிகொள்வோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், கல்விக் கண் திறந்த கர்ம வீரர், வேளாண் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உயரிய குறிக்கோளை செயல்படுத்திய வேளாண்மை நாயகர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெருமைகளை போற்றி அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன் என்று கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், கல்வி சிறந்த தமிழ்நாடு என்ற மகாகவி பாரதியாரின் வாக்கினை மெய்ப்பிக்கும் வகையில், தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியை உருவாக்கிய பெருமைக்குரிய பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில், அவர் ஆற்றிய தியாகங்களையும், சேவைகளையும் நினைவுகூர்ந்து போற்றிடுவோம்! என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், கல்விக்கண் திறக்க வேண்டும் என்பதற்காக வயிற்றுக்குச் சோறிட்டு வழிகாட்டியவர் கருணைத் தலைவர் காமராஜர். உதாரண ஆட்சி அளித்தவராக இன்றைக்கும் போற்றப்படும் பெருந்தலைவரை அவரது பிறந்த நாளில் வணங்குவது நமது பெருமை என்று கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனி என்ற நிலையை மாற்றி, அறிவுப்பசி தீர்க்க ஏழைகளுக்கு இலவசக் கல்வி உண்டு; வயிற்றுப்பசி போக்க இலவச உணவும் உண்டு என்று அறிவித்து ஏழைகளின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய #கர்மவீரர் காமராசருக்கு இன்று 120-ஆவது பிறந்தநாள். இது வரலாற்றில் பொன்னாள்!கல்வியில் மட்டுமின்றி, தொழில்துறை, பாசனம் ஆகியவற்றிலும் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு அடித்தளம் அமைத்தவர் காமராசர் தான். தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட சிவகாமி மைந்தனின் தியாகத்தை அவரது 120-ஆவது பிறந்தநாளில் நினைவு கூர்ந்து போற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் கல்விப்புரட்சி, தொழில்புரட்சி, வேளாண்புரட்சி ஆகிய அனைத்துக்கும் வித்திட்டவர் #பெருந்தலைவர் காமராசரின் 120-ஆவது பிறந்தநாள் இன்று. தமிழகத்திற்கு பொற்கால ஆட்சி வழங்கிய  அவரது வழியில்  தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்துவதற்கு இந்த நாளில் உறுதியேற்போம்!உலக அரங்கில் தமிழகத்தை தலைநிமிர வைத்தவர் கர்மவீரர். ஆனால், சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலிருந்து நீக்கப்பட்ட அவரின் பெயர் இன்னும் மீண்டும் சூட்டப்படவில்லை. உள்நாட்டு முனையத்திற்கும், மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திற்கும் உடனடியாக காமராசர் பெயர் சூட்டப்பட வேண்டும்! என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Karmaveerar ,Kamaraja ,Ponnall ,Chief Minister ,M.K.Stalin ,EPS ,OPS ,Kamal , Karmaveer, Kamaraj, Birthday, Principal, M.K. Stalin, EPS, OPS, Kamal
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை